Saturday, December 20, 2014

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 8 - பி.ஜே

அது மட்டுமின்றி தஜ்ஜால் செய்வது பொய்யும் பித்தலாட்டமும் தான்; உண்மை அல்ல என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

3450 ரிப்யீ பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா? என்று கேட்டார். ஹுதைஃபா (ரலி) அவர்கள், தஜ்ஜால் வெளியே வரும் போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை இது நெருப்பு' என்று கருதுகின்றார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும். மக்கள் எதை இது குளிர்ந்த நீர்' என்று கருதுகின்றார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் எவர் சந்திக்கின்றாரோ அவர், தான் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் என்று சொன்னார்கள்.

புகாரி 3450


அவன் எதை நரகம் என்று சொல்கிறானோ அது நரகமல்ல. சோலையாக இருக்கும். அவன் குளிர் நீர் என்று சொன்னது உண்மையில் கொதி நீராக இருக்கும். இதன் மூலம் அவன் இறைவன் அல்ல; பித்தலாட்டக்காரன் என்பது அப்போதே நிரூபிக்கப்பட்டு விடும்.

சூனியக்காரன் அல்லாஹ்வைப் போல் ஒருதடவை செயல்படுவான். அப்போதே அது பொய் என்று நிரூபிக்கப்படுவதுடன் மறுபடியும் அவனால் அதைச் செய்ய இயலாமல் போய்விடும் என்று இவர்கள் நம்பி அதற்கான ஆதாரத்தையும் காட்டுவார்களா?

இறுதியில் 40 நாட்கள் கழித்து ஈஸா நபி அவர்கள் வந்து  அவனைக் கொன்று விடுவார்கள்.

இதுவும் சூனியமும் ஒன்றாகுமா?

அது போல் மூஸா நபிகாலத்தில் வாழ்ந்த சாமிரி என்பவன் தங்கத்தால் செய்த காளைமாட்டுச் சிற்பத்தில் மண்ணை அள்ளிப்போட்டதும் அந்தச் சிற்பம் சப்தம் போட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது. தங்கச் சிற்பத்தை சப்தமிடச் செய்வது அல்லாஹ்வின் செயல் அல்லவா? சாமுரி அதைச் செய்துள்ளான் என்று திருக்குர்ஆன் கூறுகிறதே இதுவும் இணைவைத்தல் என்பீர்களா என்றும் சூனியக் கட்சியினர் கேட்கின்றனர்.

சாமிரி என்பவன் மூஸா நபி காலத்தில் இருந்தான். மூஸா நபியை அல்லாஹ் உறையாடுவதற்காக வரச் சொன்னதால் தனது சகோதரரான ஹாரூன் நபியிடம் மக்களை வழிநடத்தச் சொல்லிவிட்டு தூர்சினா மலைக்கு மூஸா நபி அவர்கள் சென்றுவிடுகின்றார்கள்.

மூஸா நபி சென்றவுடன் சாமிரி என்பவன் தங்கத்தாலான காளைமாட்டைச் செய்தான். மூஸா நபி அவர்களின் காலடி மண்ணை எடுத்து அதை காளை சிற்பத்தின் மீது போட்டான். உடனே அது சப்தம் போட்டது. இதுதான் உங்கள் இறைவன் என்று கூறி மக்களை வழிகெடுத்தான் என்று திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது உண்மை தான்.

ஆனால் சாமிரியிடம் வெளிப்பட்ட செயல் அவனுடையது அல்ல என்பதையும் அதே இடத்தில் திருக்குர்ஆன் விளக்கி விடுவதை கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக்கன்றை (அவன்) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவர்க(ளில் அறிவீனர்க)ள் "இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழிமாறிச் சென்று விட்டார்'' என்றனர். "அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை'' என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?

திருக்குர்ஆன் 20:89,90


"ஸாமிரியே! உனது விஷயமென்ன?'' என்று (மூஸா) கேட்டார். "அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது'' என்றான். "நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் "தீண்டாதே' என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம்'' என்று (மூஸா) கூறினார்.

திருக்குர்ஆன் 20:95, 96,97


இந்த வசனங்களைக் கவனியுங்கள். சாமிரியிடம் இருந்து வெளிப்பட்டது அவனது செயல் அல்ல என்று அவனே வாக்கு மூலம் தருகிறான்.

மூஸா நபி அவனிடம் விசாரித்த போது தூதரின் காலடி மண்ணை எடுத்து போட்டுப் பார்ப்போமே என்று திடீரென்று எனக்குத் தோன்றியது என்று அவன் பதிலளிக்கிறான்.

தனக்கு இது போல் எந்த ஆற்றலும் இல்லை என்றும் நான் திட்டமிடாமல் எனக்குத் தோன்றியதைச் செய்தேன் என்பதுதான் அவனது பதில்.

எனக்கு இது போல் செயல்பட முடியும். வேறு என்ன செய்துகாட்ட வேண்டும் என்று அவன் சவால் விடவில்லை. என்னையறியாமல் என்னிடமிருந்து இது நடந்துள்ளது என்று அவன் சொன்ன பதிலில் இருந்து இதை அறிந்து கொள்ளலாம்.


இதன் பின்னர் நீ படைத்த கடவுளை தீயில் பொசுக்கி கடலில் தூவுகிறேன் என்று மூஸா நபி கூறி அவ்வாறே அவன் முன்னால் செய்து காட்டுகிறார்கள்.

சாமிரிக்கு எந்த இறைத்தன்மையும் இல்லை என்றும் அவன் இறைவனைப் போல் செயல்படவில்லை என்றும் கூறப்படும் சம்பவத்தை சூனியத்துடன் ஒப்பிடுவது அறிவுடமையாகுமா?

நபிமார்களின் அற்புதம் எப்படி அவர்கள் நினைத்த நேரத்தில் செய்ய முடியாதோ, ஏதோ ஒன்றிரண்டு செயல்களைச் செய்து காட்டினாலும் அல்லாஹ் நினைக்கும் சில நேரங்களில் மட்டுமே நடக்க முடியுமோ அதுபோல் தீயவர்கள் மூலம் நிகழும் அதிசயங்களும் அமைந்துள்ளன.

ஸாமிரி என்பவன் காளைச்சிற்பத்தில் சப்தம் வரச்செய்தான் என்றால் அவன் எப்போது வேண்டுமானாலும் காளைச்சிற்பம் செய்து சப்தம் வரச்செய்வானா?

அல்லது எந்தக் காளைச்சிற்பத்தில் அவன் சப்தம் வரச் செய்தானோ அந்தக் காளைச் சிற்பத்திலாவது அவன் நினைத்த போது சப்தத்தை வரச்செய்ய இயலுமா? நிச்சயமாக இயலாது.

ஒரே ஒரு தடவை மக்களைச் சோதித்துப் பார்க்க ஒரு அதிசயத்தை அவன் வழியாக அல்லாஹ் நிகழ்த்திக் காட்டினான் என்றும் இனிமேல் அவனால் இவ்வாறு செய்ய முடியாது என்றும் நம்புவதும்,

சூனியக்காரர்கள் நினைத்த நேரத்தில் யாருக்கு எதிராகவும் சூனியம் செய்து அல்லாஹ்வைப் போல் செயல்படும் தன்மையைப் பெற்றுள்ளார்கள் என்று நம்புவதும்

எப்படிச் சமமாகும்?

ஸாமிரி செய்தான் என்பதற்கும் ஸாமிரியிடம் நிகழ்ந்திருக்கின்றது என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

இவன் பிழைக்க மாட்டன் என்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட நபர் அதிசயமாக பிழைத்து விடுகிறார் என்றால் அது அவர் செய்த அற்புதம் அல்ல. அவனிடம் அல்லாஹ் வெளிப்படுத்திய அருள் என்று விளங்கிக் கொள்கிறோம். இது போல் தான் சாமிரி தஜ்ஜால் ஆகியோரின் செயல்கள் உள்ளன.

ஆனால் சூனியக்க்காரனுக்கு அளப்பரிய ஆற்றல் உள்ளதாக நம்புகிறார்களே அது இப்படிப்பட்டதல்ல.

சூனியக்காரன் அவனே திட்டமிடுகிறான்.

அவன் திட்டமிடும் நேரங்களில் எல்லாம் மந்திரம் செய்கிறான்.

எத்தனை தடவை வேண்டுமானாலும் இவ்வாறு செய்கிறான்.

இது அப்பட்டமான இணைவைத்தல் அல்லாமல் வேறு என்ன?

எனவே சூனியத்தால் எந்தப் பாதிப்பையும் சூனியக்காரன் செய்வான் என்று கூறும் எல்லா செய்திகளையும் நாம் நிராகரித்தே ஆக வேண்டும்.

இதற்கு ஏற்கத்தக்க எந்த பதிலும் சூனியக் கட்சியிடம் இல்லை.

சூனியக்காரன் தானாக இதைச் செய்வதில்லை. அவன் ஜின்களை வசப்படுத்தி வைத்துக் கொண்டு செய்கிறான்.

சூனியக்காரர்கள் மனிதர்களைப் போல் தான் செயல்படுகிறார்கள். அவர்கள் எந்த சாதனத்தையும் பயன்படுத்தாவிட்டாலும் ஜின்களை ஏவிவிட்டு சூனியம் செய்கிறார்கள். ஜின்கள் போய் பாதிப்பை ஏற்படுத்துவது நம் கண்களுக்குத் தெரியாததால் அல்லாஹ்வைப் போல் சூனியக்காரன் செயல்படுவதாக மக்களுக்குத் தெரிகிறது என்று புதுவிளக்கம் கொடுக்கும் கொடுக்கிறார்கள் சிலர்.

இவர்கள் மனமறிந்து பொய் சொல்கின்றனர் என்பது இந்த வாதத்தின் மூலம் தெரிகிறது. சூனியக்காரனுக்கு ஆற்றல் உள்ளது என்பதற்கு இவர்கள் எதை ஆதாரமாகக் காட்டினார்கள்? யூதன் ஒருவன் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைத்து முடக்கினான் என்ற செய்தியைத் தான் ஆதாரமாக காட்டினார்கள். அந்த ஆதாரத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது?

சீப்பு, உதிர்ந்த முடி, பேரீச்சை பாளை ஆகிய பொருட்களில் சூனியம் வைத்து தர்வான் எனும் கிணற்றில் புதைத்து வைத்ததாகத் தான் சொல்லப்பட்டுள்ளது.

யூதன் ஜின்களை ஏவிவிட்டு அந்த ஜின்கள் நபிகள் நாயகத்தை தாக்கியதால் தான் மனநோய்க்கு ஆளானார்கள் என்று அந்த ஹதீஸில் இருந்தால் தான் இவ்வாறு வாதிட முடியும்.

அவர்களே நம்பாத ஒரு காரணத்தைப் புதிதாக கற்பனை செய்து சொல்கிறார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது.

பொதுவாக ஜின்களை வசப்படுத்தில் சூனியம் செய்ய முடியுமா என்பதையும் திருக்குர்ஆன் மற்றும் நபிவழியில் ஆராயலாம்.

ஜின் என்ற படைப்பு உள்ளது. நெருப்பால் படைக்கப்பட்ட அந்த படைப்பு மனிதர்களின் கண்களுக்குத் தென்படாது. ஆனாலும் மனிதனைப் போல் பகுத்தறிவு கொடுக்கப்பட்ட படைப்பு என்பதற்கு ஆதாரம் உண்டு.

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.

திருக்குர் ஆன் 51:56

 ஜின், மனித சமுதாயமே! "உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்கவிருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா?'' (என்று இறைவன் கேட்பான்). "எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது. "(ஏகஇறைவனை) மறுத்தோராக இருந்தோம்'' எனத் தங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சியமளிப்பார்கள்.

திருக்குர்ஆன் : 6:130

இதிலிருந்து ஜின்களுக்கும் தூதர்கள் உண்டு, ஜின்களுக்கும் வேதங்கள் உண்டு ஜின்களும் பிரச்சாரங்கள் செய்கின்றன என்பவற்றை விளங்கலாம்.

மதிப்பு மிக்க (மனித, ஜின் ஆகிய) இரு இனத்தவர்களே! உங்களுக்காக (விசாரிக்க) நேரம் ஒதுக்குவோம்.

திருக்குர்ஆன் 55:31

"உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களான ஜின்களுடனும், மனிதர்களுடனும் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்!'' என்று (அவன்) கூறுவான். திருக்குர்ஆன் 7:38

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விட வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.

திருக்குர்ஆன் : 7:179

"மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவராலும் நரகத்தை நிரப்புவேன்'' என்ற உமது இறைவனின் வாக்கு முழுமையாகி விட்டது.

திருக்குர்ஆன் 11:119

நாம் நினைத்திருந்தால் ஒவ்வொருவருக்கும் அவருக்கான நேர்வழியைக் கொடுத்திருப்போம். மாறாக "அனைத்து கெட்ட மனிதர்களாலும், ஜின்களாலும் நரகத்தை நிரப்புவேன்'' என்று என்னிடமிருந்து சொல் முந்தி விட்டது.

திருக்குர்ஆன் 32:13

மனிதர்களின் நன்மை தீமைகளுக்கு ஏற்ப எப்படி சொர்க்கம் நரகம் வழங்கப்படுகிறதோ அது போல் ஜின்களுக்கும் உண்டு. அவர்களுக்கும் வணக்க வழிபாடுகள் செய்யும் கடமை உண்டு என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன. 7:179 வசனம் ஜின்களுக்குப் பகுத்தறிவு உள்ளது என்று தெளிவாகச் சொல்கிறது.

பகுத்தறிவு இல்லாத மிருகங்களை வசப்படுத்தலாம். பகுத்தறிவுள்ள ஜின்னை எப்படி மனிதனால் வசப்படுத்த முடியும்?

பகுத்தறிவுள்ள மனிதன் பகுத்தறிவுள்ள இன்னொரு மனிதனை வசப்படுத்த முடியாது எனும் போது பகுத்தறிவுள்ள ஜின்களை எப்படி வசப்படுத்த முடியும்.

இது மட்டுமில்லாமல் ஆற்றலில் மனிதர்களை மிஞ்சியது ஜின் இனம்.

"பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?'' என்று (ஸுலைமான்) கேட்டார். "உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்'' என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது. கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் "நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா?'' என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ (தமக்காகவே நன்றி மறக்கிறார்.) என் இறைவன் தேவைகளற்றவன்; கண்ணியமிக்கவன்.

திருக்குர் ஆன் 27:38,39,40
இஃப்ரீத் எனும் ஜின் உட்கார்ந்த இடத்தில் எழுவதற்குள் அந்த சிம்மாசனத்தைக் கொண்டு வருகிறேன் என்று சொன்னது. அதைவிட வலிமை மிக்க ஜின் கண்மூடித் திறப்பதற்குள் கொண்டு வருகிறேன் என்று சொன்னது. அதைக் கொண்டும் வந்தது.

இதில் இருந்து ஜின்கள் மனிதனை விட பல்லாயிரம் மடங்கு ஆற்றல் பெற்றவை என்று அறிந்து கொள்ளலாம்.

ஜின்கள் பேசிக் கொண்டதை அல்லாஹ் நபியவர்களுக்கு அறிவித்துக் கொடுத்த அல்ஜின் அத்தியாயத்தில் 8,9 வசனங்களைப் பாருங்கள்

வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம். (ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.

திருக்குர்ஆன் 72:8,9

மனிதன் இந்த நவீன உகத்திலும் சென்றடைய முடியாத வானுலகுக்கு ஜின்கள் சாதாரணமாகப் போக முடியும் என்றால் ஜின்களின் ஆற்றல் எத்தகையது என்று அறிந்து கொள்ளலாம்.

ஜின்களுக்கு மனிதர்களைப் போல் பகுத்தறிவு இருக்கிறது. ஆற்றலில் மனிதனை விட பல்லாயிரம் மடங்கு அதிகமாக உள்ளது. அப்படி இருக்கும் போது மனிதனை வேண்டுமானால் ஜின்களை வசப்படுத்த முடியுமே தவிர ஜின்களை மனிதனால் வசப்படுத்தவே முடியாது என்பது உறுதியாகிறது.

இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் மனிதனால் ஜின்களை வசப்படுத்தவே முடியாது என்பதற்குத்தான் ஆதாரங்கள் உள்ளன.

சுலைமான் நபிக்கு ஜின்னை அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தது பற்றி கூறும் வசனங்களைக் கவனியுங்கள்!

ஷைத்தான்களில் அவருக்காக முத்துக்குளிப்போரையும், அது தவிர வேறு பணியைச் செய்வோரையும் (வசப்படுத்திக்) கொடுத்தோம். நாம் அவர்களைக் கண்காணிப்போராக இருந்தோம்.

திருக்குர்ஆன் : 21:82

ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம். அவர் விரும்பிய மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. "தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்'' (என்று கூறினோம்.)

திருக்குர்ஆன் : 34:12

சுலைமான் நபிக்கு ஜின்களை அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்து சுலைமான் நபியின் கட்டளைகளுக்கு ஜின்கள் பணிகின்றனவா என்று நான் கண்காணித்துக் கொண்டு இருந்தேன் என்று அல்லாஹ் கூறுகிறான். ஒவ்வொரு விநாடியும் ஜின்கள் சுலைமான் நபிக்கு கட்டுப்படுகிறதா என்று அல்லாஹ் கண்காணித்த காரணத்தால் தான் அவரால் ஜின்களை வசப்படுத்த முடிந்தது.

சுலைமான் நபிக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தான். பறவையை வசப்படுத்திக் கொடுத்தான். எறும் பேசுவதை புரியவைத்தான். இதுபோல் தான் ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தான்.

மனிதர்களால் ஜின்களை வசப்படுத்த முடியும் என்றால் சுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம் என்று சொல்வது அர்த்தமற்ற சொல்லாகிவிடும்.

சுலைமான் நபிக்கு ஜின்களை அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தான் என்பது மனிதர்களால் ஜின்களை வசப்படுத்த முடியாது என்ற கருத்தை உள்ளடக்கி இருக்கிறது.

அல்லாஹ்வின் இந்த மாபெரும் அருட்கொடைகளை அனுபவித்த சுலைமான் நபியவர்கள் எனக்குக் கொடுத்தது போன்ற ஆட்சியை யாருக்கும் கொடுக்காதே என துஆவும் செய்து விட்டார்கள்.

"என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல்'' எனக் கூறினார்.

திருக்குர்ஆன் 38:35

இந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் என ஹதீஸில் ஆதாரமும் இருக்கின்றது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள், நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது என்றோ, அல்லது இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள். பிறகு அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும் வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நினைத்தேன். அப்போது இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக (38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது என்று கூறினார்கள்.

புகாரி 461
சுலைமான் நபியவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் நபிகளாருக்கு நினைவுக்கு கொண்டு வந்து ஜின்னை வசப்படுத்தும் நிலையில் இருந்து நபியவர்களைத் தடுத்து விட்டான். சுலைமான் நபியின் பிரார்த்தனை இதையும் உள்ளடக்கியது தான் என்பதற்கும் இது ஆதாரமாக உள்ளது.

இதிலிருந்து நபி ஸல் அவர்கள் கூட ஜின்னை வசப்படுத்தி வைக்க முடியாது. ஜின்களின் தன்மை மனிதர்களிடம் கட்டுப்படுவது கிடையாது. அல்லாஹ் தான் வசப்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இவையனைத்தும் குர்ஆனில மிகத் தெளிவாக இருக்கும் போது சூனியக்காரர்கள் ஜின்களை வசப்படுத்திக் கொண்டார்கள் என்பது பொய்யான விஷயம் என்பது தெளிவாகின்றது.

ஜின்களை வைத்து சூனியம் செய்தால் அதற்கு ஏன் முடி, காலடி மண் தேவைப்படுகின்றது. ஒரு கட்டளை பிறப்பித்தால் ஜின்களே செய்து விடும்.

நாங்கள் தான் ஜின்களை வைத்து சூனியம் செய்கின்றோம் என்று சூனியக்காரர்களே சொல்லாமல் இருக்கும் போது சூனியத்திற்கு முட்டுக் கொடுக்கும் உலமாக்கள் இப்படிச் சொல்வது தான் வேதனை.

மனிதன் ஜின்களை வசப்படுத்தி வைத்து இருந்தால் தனது தேவைகளுக்கு மக்களிடம் கையேந்திக் கொண்டு இருப்பானா?

ஜின்னை வசப்படுத்தி வைத்திருப்பவனிடம் போய் நான் உன்னை அடிக்கின்றேன். நீ எதுவும் செய்யக்கூடாது. நீ வசப்படுத்தி வைத்துள்ள ஜின்தான் என்னைத் தடுக்க வேண்டும் என்று சொன்னால் அவன் ஏற்றுக் கொள்வானா?

ஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பதாக கப்சாக்களை அள்ளிப் போடுவோர் சில்லரை வேலைகளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றான். ஜின்கள் பார்க்கும் எந்த வேலையையும் அவர்கள் பார்ப்பதில்லை.

ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பிவிட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.

திருக்குர் ஆன் 7:27

பார்ப்பவன் வசப்படுத்த முடியுமா? பார்க்காதவன் வசப்படுத்த முடியுமா? மறைந்திருக்கின்றவன் நம்மை மிரட்டி வசப்படுத்துவான். வசப்படுத்த வேண்டுமானால் ஜின்கள் தான் மனிதர்களை வசப்படுத்த முடியும்.

ஜின்களை வசப்படுத்துவது என்பது மிகவும் அப்பட்டமான பொய் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஜின்களை வைத்து தங்கச் சுரங்கங்களில் உள்ள தங்கத்தைக் கொண்டு வரச் செய்து ஏழைகளுக்கு உதவட்டுமே?

இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் கடும் எதிரிகளாக எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களில் சிலரை முடக்கிக் காட்டட்டுமே?

ஜின்களைக் கொண்டு ஜின்கள் செய்யத் தக்க எந்த வேலையும் இவர்கள் செய்வதில்லை. மாறாக மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதற்குத் தான் சூனியம் என்று பயம் காட்டுகின்றனர்.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner