Tuesday, December 2, 2014

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 2 - பி.ஜே


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்நியப் பெண்ணுடன் தனியாக இருந்தார்கள். அங்கே தங்கினார்கள் என்று ஒரு ஹதீஸ் இருப்பதாக வைத்துக் கொள்வோம். (அப்படியும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன. அதைப் பின்னர் பார்ப்போம்.)

ஒழுக்கத்தைப் போதிக்க வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த ஒழுக்கத்துக்கு எதிரான செயலை ஒருக்காலும் செய்து இருக்க மாட்டார்கள் என்று நம்பி இது போன்ற செய்திகளைக் கட்டுக்கதைகள் என்று நம்பி புறக்கணித்து விட வேண்டும்.

ஹதீஸ்களை இந்த அடிப்படையில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கவே அனுப்பப்பட்டார்கள்.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

திருக்குகுர்ஆன் 16 : 44


விளக்கம் கொடுக்க அனுப்பப்பட்ட நபியவர்கள் குர்ஆனுக்கு முரணாகப் பேசவோ நடக்கவோ மாட்டார்கள். அப்படி பேசியதாக அல்லது நடந்ததாக ஒரு செய்தி கிடைத்தால் அது எந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது அல்ல; செய்தது அல்ல என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும்.

இது ஹதீஸ்களை மறுப்பதாக ஆகாது. இதையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் நம்பகத் தன்மையில் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் சமமானவை அல்ல. திருக்குர்ஆனைப் பொறுத்த வரை அனைத்து நபித்தோழர்களும் அது இறைவேதம் என்பதற்குச் சாட்சிகளாக உள்ளனர்.

குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டி "இது என் இறைவனிடமிருந்து வந்தது'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒட்டுமொத்த நபித்தோழர்களும் சாட்சிகளாக இருந்தனர். எழுத்து வடிவில் பதிவு செய்தனர். பலர் மனனம் செய்தனர்.

ஹதீஸ்களைப் பொறுத்தவரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிகபட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார்.

ஒட்டு மொத்த சமுதாயமே சாட்சி கூறுவதும் ஒருவர் சாட்சி கூறுவதும் சமமானதாக ஆகாது.

எவ்வளவு நம்பகமானவர்கள் என்றாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மட்டுமின்றி அதற்கு அடுத்த காலத்து ஒட்டுமொத்த மக்களும் "இதுதான் குர்ஆன்' என்று நபித்தோழர்கள் சொன்னதாக அறிவிக்கின்றனர். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள அனைவரும் இதுபோல் அறிவிக்கின்றனர்.

ஹதீஸ்களைப் பொருத்தவரை ஓரிரு நபித்தோழர்கள் தான் அறிவித்துள்ளனர் என்பது மட்டுமின்றி நபித்தோழர் இப்படிச் சொன்னார் என்று அறிவிப்பதும் ஓரிருவர் தான். நூலாகத் தொகுக்கப்படும் காலம் வரை ஒருவரில் இருந்து ஒருவர் என்ற அடிப்படையில் தான் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டன.

குர்ஆன் விஷயத்தில் கடுகளவு கூட சந்தேகம் வராது. ஹதீஸ்களைப் பொறுத்த வரை இந்த நிலை கிடையாது.

ஆனாலும் நபித்தோழர்களின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் அவற்றை ஏற்றுச் செயல்படுகிறோம். குர்ஆனுடன் மோதாத வரை இத்தகைய செய்திகளில் சந்தேகம் ஏற்பட முகாந்திரம் இல்லை. குர்ஆனுடன் மோதும் போது "இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது'' என்று முடிவு செய்து குர்ஆனுக்கு முன்னுரிமை அளிப்பது தான் முறையாகும்.

நபித்தோழர்கள் அறைகுறையாகக் கேட்டதன் மூலம் அல்லது தவறாகப் புரிந்து கொண்டதன் மூலம் இந்தத் தவறு ஏற்பட்டு இருக்கலாம். அல்லது நபித்தோழர்களிடம் கேட்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவரிடம் தவறு நிகழ்ந்திருக்கலாம். அல்லது அதற்கடுத்த தலைமுறையைச் சேர்ந்தவரிடம் தவறு ஏற்பட்டிருக்கலாம்.

"ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை; திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது; இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது'' என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்று குர்ஆனை மறுத்து விடக்கூடாது. குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை நிறுத்தி வைப்பதும், அது நபிமொழி அல்ல என்று மறுப்பதும் தான் நேர்மையான பார்வையாகும். இந்த நேரத்தில் இது போன்ற ஹதீஸ்களை மட்டும் நாம் விட்டுவிட வேண்டும்.

இத்தகைய ஹதீஸ்கள் புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் சரி தான். புகாரி என்பவரும் மனிதர் தான்.

இதற்கு உதாரணமாக புகாரியில் இடம் பெற்ற பின்வரும் ஹதீஸை எடுத்துக் கொள்ளலாம்

3359 உம்மு ஷுரைக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும் அவர்கள், அது இப்ராஹீம் (அலை- அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்தது என்றும் சொன்னார்கள்.

நூல் : புகாரி 3359


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்கள் என்று மட்டும் இருந்தால் நபிகள நாயகத்தின் அந்தக் கட்டளையை நாம் நிறைவேற்ற வேண்டும். இது எந்த வசனத்துக்கும் எதிரானது அல்ல.

ஏன் கொல்லச் சொன்னார்கள் என்றால் இப்ராஹீம் (அலை) நெருப்புக் குண்டத்தில் போடப்பட்ட போது பல்லி மட்டும் வாயால் ஊதி நெருப்பை மேலும் மூட்டிவிடுகின்றது என்று சொல்லப்படுகிறது.

இதனை நாம் எப்படி பார்க்கின்றோம். இதை நபி அவர்கள் சொல்லவில்லை என்றே சொல்கின்றோம். குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்க அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் இவ்வாறு சொல்லியிருக்க மாட்டார்கள்.

பல்லி ஒரு சிறு உயிரினம். அது நெருப்பை ஊதி பெரிதாக்கியது என்பது மிகப்பெரும் மேதையான நபியின் கூற்றைப் போல் இல்லை.

அந்த நெருப்புக்கு அருகில் என்றால் கூட அது கருகி விடும் என்ற விஷயம் கூடவா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது?

சில உயிரினங்கள் இறைத்தூதர்களுக்கு உதவியுள்ளன என்று திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதால் அது போன்ற ஹதீஸ்களை நாம் ஏற்கலாம். சுலைமான் நபியவர்களுக்கு ஹுத் ஹுத் பறவை உதவியதாக திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க 27:20)

ஆனால் எந்த உயிரினமும் இறைத்தூதர்களுக்கு எதிராக களமிறங்காது. அவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டே நடக்குமாறு படைக்கப்பட்டுள்ளன.

அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

அல்குர்ஆன் (3 : 81)

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.

அல்குர்ஆன் (13 : 15)

வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மற்றும் மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர் என்பதை நீர் அறியவில்லையா?

அல்குர்ஆன் (22 : 18)

ஒஇந்த அடிப்படைக்கு மாற்றமாக பல்லி சம்பவம் அமைந்துள்ளது.

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படை என்பதை பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.

(பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதித்துக் கொள்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான்.

அல்குர்ஆன் (6 : 164)

நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர்வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.

அல்குர்ஆன் (17 : 15)

ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார். கனத்தவன் அதைச் சுமக்குமாறு யாரையேனும் அழைத்தால் (அழைக்கப்படுபவன்) உறவினராக இருந்தாலும் அதிலிருந்து எதுவும் அவன் மீது சுமத்தப்பட மாட்டாது.

அல்குர்ஆன் (35 : 18)

நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களிடம் அதைப் பொருந்திக் கொள்வான். ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். பின்னர் உங்கள் மீளுதல் உங்கள் இறைவனிடமே உள்ளது.

அல்குர்ஆன் (39 : 7)

மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் "ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை'' என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?

அல்குர்ஆன் (53 : 36)

ஒரு பல்லி இப்ராஹீம் நபிக்கு எதிராக நெருப்பை ஊதியது என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக அந்தப்பல்லியைத் தான் கொல்ல வேண்டும். அந்தப் பல்லி அல்லாத மற்ற பல்லிகளை எப்படி கொல்லலாம்?

அந்த பல்லியின் வாரிசுகளையும் அந்தப் பல்லி அல்லாத மற்ற பல்லிகளின் வாரிசுகளையும் கொல்லுமாறு குர்ஆனுக்கு எதிராக நபியவர்கள் சொல்லி இருப்பார்களா?

எனவே இது நபியவர்கள் சொல்லாததாகும். அவர்கள் பெயரால் யாரோ இட்டுக்கட்டியதாகும் என்று முடிவு செய்வதுதான் ஹதீஸ்களை புரிந்து கொள்ளும் சரியான வழியாகும்

இன்னொரு ஹதீஸைப் பாருங்கள்.

3570 அப்துல்லாஹ் பின் அபீ நமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எங்களிடம் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் பள்ளி வாசலிலிருந்து (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசினார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்த போது (வானவர்களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் முதலாமவர், இவர்களில் அவர் யார்? என்று கேட்டார். அவர்களில் நடுவிலிருந்தவர், இவர்களில் சிறந்தவர் என்று பதிலளித்தார். அவர்களில் இறுதியானவர், இவர்களில் சிறந்தவரை (விண்ணுலகப் பயணத்திற்காக) எடுத்து வாருங்கள் என்று சொன்னார். அன்றிரவு இது மட்டும் தான் நடந்தது. அடுத்த இரவில் நபி (ஸல்) அவர்கள் தமது உள்ளம் பார்க்கின்ற நிலையில்-(உறக்க நிலையில்)- அம்மூவரும் வந்த போது தான் அவர்களைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் தான் உறங்கும்; அவர்களுடைய உள்ளம் உறங்காது. இறைத்தூதர்கள் இப்படித் தான். அவர்களின் கண்கள் உறங்கும்; அவர்களுடைய உள்ளங்கள் உறங்க  மாட்டா. ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பொறுப்பேற்று அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு வானத்தில் ஏறிச் சென்றார்கள்.

நூல் : புகாரி 3570

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூதராக ஆக்கப்பட்டபின் தான் மிஃராஜ் சென்றார்கள் என்று ஏராளமான ஹதீஸ்கள் கூறுகின்றன.

ஆனால் அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன் மிஃராஜ் பயணம் நிகழ்ந்ததாக இந்த ஹதீஸ் கூறுகிறது.

வஹீ வருவதற்கு முன் மிஃராஜ் நடந்தது என்று ஒரு அறிஞரும் ஏற்கவில்லை. அவர்கள் அனைவருமே இது தவறான அறிவிப்பு என்று தான் சொல்கிறார்கள்.

முன்னரே மிஃராஜ் நடந்து இருந்தால் முதல் வஹீ வந்த போது அவர்கள் நடுங்கி இருக்க மாட்டார்கள். அவர்களின் மனைவி கதீஜா அவர்கள் அவர்களை ஆறுதல்படுத்தும் நிலை ஏற்பட்டு இருக்காது.

இது புகாரியில் பதிவாகி இருந்தாலும் இது தவறான செய்தி தான் என்று முடிவு செய்வது தான் ஹதீஸை புரிந்து கொள்ளும் சரியான வழியாகும்.

மற்றொரு ஹதீஸைப் பாருங்கள்.

2321 முஹம்மத் பின் ஸியாத் அல் அல்ஹானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூ உமாமா அல் பாஹிலீ (ரலி) அவர்கள், ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும் போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை' என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.

புகாரி 2321

விவசாயத்தை புகழாத மதமும் கிடையாது. சமுதாயமும் கிடையாது.

குர்ஆனில் அல்லாஹ் விவசாயத்தைப் பற்றி நல்ல விதமாக சொல்லிக்காட்டுகின்றான்.

நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா? நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா? நாம் நினைத்திருந்தால் அதைக் கூளமாக்கியிருப்போம். நாம் கடன் பட்டு விட்டோம்! இல்லை! நாம் தடுக்கப் பட்டு விட்டோம் என்று (கூறி) அப்போது கவலையில் ஆழ்ந்து விடுவீர்கள்.

அல்குர்ஆன் (56 : 63)

அதன் மூலம் பயிர்களையும், ஒலிவ மரம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்காக அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று இருக்கிறது.

அல்குர்ஆன் (16 : 11)

"வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்'' என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?

அல்குர்ஆன் (32 : 27)

அலாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி அதைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கிறான் என்பதை நீர் அறியவில்லையா? பின்னர் அதன் மூலம் மாறுபட்ட நிறங்களைக் கொண்ட பயிர்களை வெளிப்படுத்துகிறான். பின்னர் அது காய்ந்து, மஞ்சள் நிறமாக ஆவதைக் காண்கிறீர். பின்னர் அதைச் சருகுகளாக ஆக்குகிறான். அறிவுடையோருக்கு இதில் அறிவுரை உள்ளது.

அல்குர்ஆன் (39 : 21)

இரண்டு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுவீராக! அவர்களில் ஒருவருக்கு இரண்டு திராட்சைத் தோட்டங்களை ஏற்படுத்தினோம். அவ்விரண்டுக்கும் பேரீச்சை மரங்களால் வேலி அமைத்து, அவ்விரண்டுக்கும் இடையே பயிர்களையும் ஏற்படுத்தினோம்.

அல்குர்ஆன் (18 : 32)

இன்னும் நபி (ஸல்) அவர்களும் விவசாயத்தை புகழ்ந்து கூறியுள்ளார்கள்.

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் உம்மு முபஷ்ஷிர் அல்அன்சாரிய்யா (ரலி) அவர்களது பேரிச்சந்தோப்பிற்குச் சென்றார்கள். உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்களிடம் இந்த பேரீச்ச மரங்களை நட்டுவைத்தது யார்? முஸ்லிமா அல்லது இறைமறுப்பாளரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை ஒரு முஸ்லிம் தான் (நட்டுவைத்தார்) என்று விடையளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் ஒருவர் மரமொன்றை நட்டுவைத்து அல்லது விதையொன்றை விதைத்துப் பயிர் செய்து அதிலிருந்து (வரும் விளைச்சலை அல்லது கனிகளை) ஒரு மனிதனோ கால்நடையோ அல்லது ஏதேனும் ஒன்றோ உண்டால் அது அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) அவர்கள்

நூல் : முஸ்லிம் (3160)

குர்ஆனுக்கு விளக்கம் சொல்ல வந்த நபியவர்கள் எப்படி குர்ஆனுக்கு மாற்றமாக என்று சிந்தித்து இது பொய்யான செய்தி என்றும் நபியவர்கள் சொல்லாத செய்தி என்றும் முடிவு செய்வதுதான் ஹதீஸை புரிந்து கொள்ளும் சரியான வழியாகும்.

நாம் ஹதீஸ்களை மறுக்கவில்லை. இதுபோன்ற செய்திகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரில் தவறான புரிதலிலோ அல்லது இட்டுக்கட்டப்பட்டோ, தவறாகவோ சொல்லியிருக்கலாம் என்று நம்ப வேண்டும்.

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner